காலவ மஹரிஷியின் 360 பெண்களையும் பகவான் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொருவராக திருமணம் செய்து கொண்டு அவர்களை ஒரே பெண்ணாக்கி தமது மடியில் அமர்த்திக் கொண்டு நித்ய கல்யாணப் பெருமாளாக ஸேவை சாதிக்கும் ஸ்தலம். பிராட்டியை இடப்புறத்தில் ஏந்தியுள்ளபடியால் இந்த ஸ்தலம் 'திருஇடஎந்தை' என்று பெயர் பெற்று பின்னர் 'திருவிடந்தை' என்று மருவியது.
மூலவர் லக்ஷ்மி வராஹப் பெருமாள், தமது இடது மடியில் பிராட்டியை ஏந்தியபடி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் வராஹ மூர்த்தியாக ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் நித்ய கல்யாணப் பெருமாள். தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பது திருநாமம். மார்க்கண்டேயருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
பெருமாள் தினமும் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணத் தடைகள் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கை.
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|